கோவை அருகேயுள்ள வீரகேரளத்தை சேர்ந்த அன்சி என்பவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு போட்டோ மற்றும் வீடியோ எடுக்க மேட்டுப்பாளையத்தில் தி பிக்சர் போட்டோகிரோபி என்ற ஸ்டூடியோ நடத்தி வந்த டேவிட் டான் என்பவரிடம் ஆர்டர் கொடுத்தார். 2023 ஜன 26-ல் திருமண நிகழ்ச்சி முடித்த பிறகு அதற்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.
ஆனால் திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகியும் போட்டோ ஆல்பம் மற்றும் வீடியோ பென்டிரைவ் கொடுக்கவில்லை. ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஆல்பத்தை மட்டும் கூரியரில் அனுப்பினார். வீடியோ பதிவு பென்டிரைவ் அனுப்பவில்லை. இது பற்றி கேட்டபோது ஸ்டூடியோவிற்குள் மழை நீர் ஒழுகியதால் கம்ப்யூட்டர் நனைந்து ஹார்டு டிஸ்க் பழுதாகி விட்டதால் வீடியோ எடுத்தது அழிந்து விட்டதாக காரணம் தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட அன்சி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நேற்று இது பற்றி விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால் மனுதாரர் செலுத்திய தொகையில் 30, 000 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். மன உளச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.