சென்னை: ரயிலில் சென்று பூட்டிய வீடுகளை குறிவைத்து அடுத்தடுத்து திருட்டில் ஈடுபட்ட பெங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை குமரன் நகர், முருகேசன் தெருவில் வசிப்பவர் பாலமுருகன் (38). இவர் கடந்த 1-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு வெளியே சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அவர் வைத்த இடத்தில் வீட்டின் சாவியை காணவில்லை. இதையடுத்து, மாற்று சாவி கொண்டு வீட்டை திறந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில், பாலமுருகன் வீட்டில் கைவரிசை காட்டியது கர்நாடகா மாநிலம், வடக்கு பெங்களூரு பாரதி நகரைச் சேர்ந்த ஜெயந்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜெயந்தி தற்போது 5 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்தது.
இவர் பெங்களூரிலிருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து, ரயில் மூலம் சைதாப்பேட்டை, மாம்பலம் என ஏதேனும் ரயில் நிலையங்களில் இறங்கி அங்குள்ள பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, அதனருகில் சென்று பூட்டிய வீட்டின் சாவியை தேடி எடுத்து, திருடிக் கொண்டு பெங்களூரு சென்றுவிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இவ்வாறு கடந்த 2 மாதங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், குமரன் நகர் பகுதியில் 4 வீடுகளில் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.