சென்னை: தீபாவளி பண்டிகை... அலைமோதும் கூட்டம்
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், துணி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று விடுமுறை என்பதால் மேலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விற்பனையும் கனஜோராக நடைபெற்று வருகிறது. வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஜவுளி கடை, இனிப்பு மற்றும் பட்டாசு கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. தி. நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டுள்ளனர். புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, போரூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளனர். இன்று விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடனும் மக்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். மேலும் முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இருந்து பாதுகாக்கவும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.