சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள ஏ சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை சாலையில் வீசுவது, பெண்களை கேலி செய்வது, சாலையோர கடைகளில் சாப்பிட்டுவிட்டு அராஜகம் செய்வது என அட்டகாசம் செய்து வருவதாக கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தொடர்ந்து புகார் செய்து வந்தனர்.
இதையடுத்து இன்று காலை இப்பகுதியை, கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அவரது உத்தரவின் பேரில், மது பிரியர்கள் அட்டகாசம் செய்யும் பகுதியை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். பின்னர் போக்குவரத்துக்கு இடையூறான சுமார் 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், 'மதுபிரியர்கள் அருந்திவிட்டு அவ்வழியாக செல்பவர்களை ஆபாசமான வார்த்தைகளால் பேசுகின்றனர்.
இந்த சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. நடந்து செல்லும் பெண்களையும் கேலி செய்கின்றனர். மேலும் சாலையில் வாகனங்களை மறிக்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மது அருந்திவிட்டு கேலி செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.