சென்னை: டிரைவர் இல்லா மெட்ரோ சோதனை வெற்றி

79பார்த்தது
சென்னை: டிரைவர் இல்லா மெட்ரோ சோதனை வெற்றி
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ஆம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. 

இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ. 3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, டிரைவர் இல்லாத ரயிலின் சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்கென மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில், அக்டோபர் மாதம் பூந்தமல்லி டெப்போவிற்கு தனித்தனியாக கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லைத்தோட்டம் மெட்ரோ நிலையம் வரை சோதனை ஓட்டத்தை துவங்கியுள்ளது. டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட இந்த மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 

3 கி.மீ. தூரம், 25 கி.மீ. வேகத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடந்துள்ளது. இது தொடர்பாக வீடியோவை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி