சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் கட்டட ஒப்பந்ததாரரான முருகன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வேளச்சேரியில் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு, இரண்டு புதிய மின் இணைப்பு கேட்டு வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மின்வாரியப் பொறியாளர் வெங்கடேசன், மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் கேட்டதாகவும், அவ்வளவு தொகையை தன்னால் தர இயலாது என முருகன் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் லஞ்சமாகக் கொடுக்கும்படி கூறிய வெங்கடேசன், அதில் முன்பணமாக 2 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ஆகையால் மின்வாரிய அதிகாரி லஞ்சம் கேட்பதாக முருகன் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை முருகன் கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட வெங்கடேசனை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் பிரிவினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.