கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? என முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
தி. மு. க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம். அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று துடித்தவர்களுக்கு இண்டியா கூட்டணி மூலம் ஜனநாயகக் கடிவாளம் போட்டிருக்கிறோம். அதுதான் நம்முடைய இயக்கத்துக்கும் - உங்களுக்கும் - எனக்குமான பெருமை. அடுத்து, கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் சோழர்கள் ஆட்சியை பொற்காலம் என்று சொல்வார்கள். எதிர்காலத்தில் எழுதப்போகும் வரலாற்றில், மக்களாட்சி மலர்ந்த பிறகு அமைந்த ஆட்சிகளில் திமுகவின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் இந்த கருப்பு – சிவப்புக்காரர்கள் என்று சொல்ல வேண்டும். நம் முழக்கம், வெல்வோம் 200. படைப்போம் வரலாறு என அவர் தெரிவித்துள்ளார்.