திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நடைபெறவிருப்பதை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு, குமரி முனை சிலையின் தலை வரை ஆழிப்பேரலை தாக்கிய போதும், அதனை எதிர்கொண்டு எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக நின்றார் திருவள்ளுவர். காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு. திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.