பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினையும், திமுகவையும் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதல்வரை, மத்தியில் ஆளும் பாஜகவை, பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசினார். விஜய் பேசியதாவது: கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா? என அவர் பேசினார்.