வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ. 5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசின் சார்பில் வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயனிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (30-7-2024) கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.