சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார் குறித்து, இழிவான ஆதாரமற்ற கருத்துகளை தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகளை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், சுயமரியாதை, சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சாதி ஒழிப்பு என பல்வேறு தளங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கும் தந்தை பெரியார், தமிழகம் கண்ட நவீன சீர்திருத்தங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக அமைந்தவர். அவருடைய சிந்தனையால் ஆத்திரமடைந்த பிற்போக்குச் சக்திகளும், சங்கபரிவார வெறுப்பு அரசியல் கூட்டமும் அவருடைய சிலையைச் சேதப்படுத்துவது, அவதூறுகளின் மூலம் இழிவுபடுத்துவது என்று தரம் தாழ்ந்து செயல்பட்டு பரவலான கண்டனத்திற்கு ஆளாகி வந்தனர்.
தற்போது அதே பாதையில், மிக மோசமான அவதூறுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான் வெளியிட்டிருக்கும் அவதூறு கருத்துகளை சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது அநாகரிகச் செயலுக்காக சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.