அம்பேத்கரை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27ம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். டாக்டர் பி. ஆர். அம்பேத்கரை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27 ஆம் தேதி மாலை சென்னை வருகிறார்.தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, 'அமித்ஷாவே திரும்பிப் போ' என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை மோடி, அமித்ஷா உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் உணர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.