நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘பூலித்தேவன் மாளிகை’ என்றும், அந்த வளாகத்துக்கு ‘சுந்தரலிங்கனார் வளாகம்’ என்ற பெயரையும் மீண்டு சூட்ட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை அமைந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணி என காரணங்காட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை மாவட்ட நிர்வாகம் அங்கிருந்து அகற்றியுள்ளது. ஆனால் இதுவரை மீண்டும் அங்கு கட்டபொம்மன் சிலை நிறுவப்படவும் இல்லை, எந்த ஒரு முறையான அறிவிப்பும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படவும் இல்லை.
அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பூலித்தேவன் மாளிகை என்றும், அந்த வளாகத்திற்கு சுந்தரலிங்கனார் வளாகம் என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது புனரமைக்கப்பட்ட அலுவலகத்திற்கு அவர்களின் பெயர்களையும் சூட்டாமல் பொதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது.