தர்மபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதை திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தர்மபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 13 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்களில் ஒரு வட்டாட்சியர் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 10 வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். நிலங்களைக் கையகப்படுத்துவதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலிருந்து நேரடியாக ரயில் பாதை இல்லாத ஒரே மாவட்டத் தலைநகரம் தர்மபுரி தான்.
இந்த நிலையை மாற்றி தர்மபுரியை சென்னையுடன் ரயில்வே மூலம் இணைக்க இந்தத் திட்டம் மிகவும் அவசியமாகும். இதை உணர்ந்து கொண்டு தருமபுரி - மொரப்பூர் புதிய அகலப்பாதைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.