மக்களை எவ்வாறு திமுக அரசு ஏமாற்றுகிறதோ, அதேபோல் தான் அரசு ஊழியர்களையும் ஏமாற்ற முயல்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும்; காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2021-ஆம் ஆண்டில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியதில் அரசு ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை நினைத்து கொதித்துப் போயிருக்கும் அரசு ஊழியர்கள், வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்கப் போவதாக சூளுரை மேற்கொண்டுள்ளனர். அதே மனநிலையில் தான் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டப்படுவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.