நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டு இளநிலை மருத்துப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் எந்த வகையிலும் சாத்தியமற்ற வகையில் சில மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வாரி இறைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2024ம் ஆண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதாகவும், சில மையங்களில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் நடந்த குளறுபடிகள் மருத்துவப் படிப்பில் சேர நினைத்திருந்த மாணவர்களின் நம்பிக்கையை குலைத்திருக்கின்றன. அந்த மாணவர்களின் ஐயங்கள் அனைத்தையும் மத்திய அரசு போக்க வேண்டும்.
இந்த அநீதியைப் போக்க நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.