சென்னையில் மாத வருமானம் ரூ. 60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையை ஏழை, நடுத்தர மக்கள் வாழத் தகுதியற்ற மாநகரமாக மாற்றுவது தான் திமுகவின் திட்டமா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் மாத வருமானம் ரூ. 60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மாத வருமானம் ரூ. 21 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை உள்ள பணியாளர்களுக்கான தொழில் வரியை 35% வரை உயர்த்தியுள்ள சென்னை மாநகராட்சி, அதற்கும் கூடுதலாக ஊதியம் பெறுவோருக்கான தொழில்வரியை உயர்த்தவில்லை.