குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அவர்களால் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய தமிழக அரசே, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு பதிலாக சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியையும், தொழிலாளர்கள் நாளான மே ஒன்றாம் தேதியையும் கருப்பு நாளாக அறிவித்து விடலாம். தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூகநீதியையும் படுகொலை செய்து வரும் திமுகவுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.