சென்னை சைதாப்பேட்டையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை தேவநாயுடு தெருவை சேர்ந்தவர் வீரராகவன்(29). இவர் அதே பகுதியில் பொருமாள் கோயில் தெருவில் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி கடையின் அருகே 4 டாடா ஏஸ் லோடு வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் வந்து பார்த்த போது, வாகனத்தில் இருந்து பேட்டரி திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வீரராகவன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிண்டி லேபர் காலனி பகுதியை சேர்ந்த ஜான்சன்(41) மற்றும் மடுவாங்கரை பகுதியை சேர்ந்த கிரிகண்ணன்(20) ஆகியோர் திருடியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பேட்டரி பறிமுதல் செய்தனர்.