தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு இன்று (ஜூன் 4) தொடங்கியுள்ளது. மொத்த விண்ணப்பத்தில் சென்னை மாநிலக்கல்லூரி, கோவை நந்தனம் உள்ளிட்ட 5 கல்லூரிகளுக்கும் சுமார் 70 சதவீதம் விண்ணப்பங்கள் குவிந்து கடும் போட்டி நிலவுகிறது.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட 11 கல்லூரிகள் உட்பட 180 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 2 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்ததில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். சென்னையில் உள்ள 8 கல்லூரிகளில் 10,400 இடங்களுக்கு மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
மாநில அளவிலான விண்ணப்பப் பதிவில் சென்னை மணிலா கல்லூரி, கோவை நந்தனம், வியாசர்பாடி, திருச்சி ஆகியவை 1 லட்சத்து 56 ஆயிரத்து 971 விண்ணப்பங்களை பெற்று முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. மொத்த விண்ணப்பத்தில் இது 69.76 சதவீதமாகும்.
சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள 2,380 இடங்களுக்கு 40,167 விண்ணப்பங்களும், கோவை அரசு கலை கல்லூரியில் 1,727 இடங்களுக்கு 33,757 விண்ணப்பங்களும் குவிந்துள்ளன. நடப்பு ஆண்டு முதல் இருபால் கல்லூரியாக மாற்றப்பட்ட நந்தனம் அரசு கலை கல்லூரியில் 1,430 இடங்களுக்கு 29,376 விண்ணப்பங்கள் வந்துள்ளன.