சென்னை: பிரியங்கா காந்திக்கு வானதி சீனிவாசன் கேள்வி
நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி வதேரா, ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்? என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் காந்தி உடன் கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 16 குடும்பத்தினரையோ, அல்லது கொலை நடந்தபோது படுகாயம் அடைந்தவர்களையோ சந்திக்கவில்லை. அந்த காயத்தின் வடுக்களோடு இன்றும் வாழ்பவர்கள் மீது பரிவு காட்டவில்லை. சோனியா காந்தி இப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரது மகன் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இப்போது ராகுலின் சகோதரி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அது மட்டுமல்லாது பிரியங்கா காந்தியின் மகனையும் அரசியலுக்கு கொண்டுவர தயார் படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் சுட்சியின் காரிய கமிட்டியை ஒரு குடும்பத்துக்குள்ளேயே உருவாக்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா எம். பியாக வேண்டும் என்பதற்காக, மக்களின் உணர்வுகளை தூண்டி விடுகிறார். தன் தந்தையின் கொலையையும் அதற்கு பயன்படுத்துகிறார். வெட்கக்கேடு என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.