அதிமுக கவுன்சிலர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் அப்போதைய அதிமுக பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சென்னை கண்ணப்பர் திடல் மீன்அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பியது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிமுக கவுன்சிலர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜனவரி 10) காலை தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.