சென்னை: போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள்; அன்புமணி

60பார்த்தது
சென்னை: போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள்; அன்புமணி
உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள் என்று முதல்வருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்.,24) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் போதையை ஒழிக்க வேண்டும்; போதைப் பழக்கங்களில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலியில், ''தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது முரண்பாடுகளின் மொத்த உருவம் ஆகும்.

தமிழகத்தின் தந்தையாக திகழ வேண்டிய நீங்கள், எல்லா பாதைகளிலும் கஞ்சாவில் தொடங்கி எல்லா போதைப் பொருட்களும் விற்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கிறீர்களே? இது நியாயமா? போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். உங்களின் இந்த விருப்பமும், அக்கறையும் உண்மையென்றால் உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால் தமிழ்நாட்டு இளைஞர்கள் செல்லும் பாதை இருட்டாகத் தான் இருக்கும்; அதைத் தவிர்க்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி