அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு. க. ஸ்டாலின், ‘ரூ. 7, 616 கோடி மதிப்பில் 11, 516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயணம் வெற்றிகரமாகவும், சாதனைக்கு உரியதாகவும் இருந்தது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த ஆக. 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ மாகாணங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த பயணத்தில் 19 நிறுவனங்களுடன் ரூ. 7, 616 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2 மாகாணங்களில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழர்களை சந்தித்து உரையாடினார்.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு செப். 12-ம் தேதி துபாய் வந்தார். அதைத்தொடர்ந்து, நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு முதல்வரை, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி. ஆர். பாலு, ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 7, 616 கோடி முதலீடு வந்துள்ளது. இதன் மூலம் 11, 516 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.