மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். ஐயர்லாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் இத்தகைய முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.