பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் அவரிடம், தமிழகத்தில் துணை முதல்வராக பட்டியலினத்தவரை நியமிக்கும் சூழல் இருக்கிறதா, அதற்கான வாய்ப்புகள் அமையுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், ஆளுங்கட்சியின் சுதந்திரம், உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திமுகவின் முக்கிய தலைவர்களின் அனுமதியுடன்தான் இந்த முடிவை எடுத்திருக்க முடியும். இதில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது. பொதுவான முறையில் எளிய மக்கள், பட்டியலினத்தவர்கள் முக்கியமான அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பது வேட்கை. இது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் முன்மொழியக் கூடிய ஒன்றுதான். அதேநேரம், கூட்டணி கட்சி, தோழமை கட்சியாக இருந்தாலும் மற்றொரு கட்சியின் முடிவில் தலையிட முடியாது என அவர் தெரிவித்தார்.