மருத்துவ ஆராய்ச்சிக்கான உதவித்தொகை ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு’ புத்தகத்தை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, மருத்துவ ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு சிறந்த அறிவியலாளர் விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் உதவித் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார்.