சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின்போது, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள அரசுத் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த அரசின் செய்திக் குறிப்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கூறியது, மழைநீர் வடிகால்களை சீரமைப்பது, வெள்ளம் வடியும் கால்வாய்களை தூர்வாரும் பணியை வேகப்படுத்துவது என பல்வேறு திட்டப் பணிகளை நம் அரசு மேற்கொண்டது. இன்னும் பல பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனாலும், கடந்த ஆண்டு வரலாறு காணாத மழையின்போது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தினை மனதில் கொண்டு. இந்த மழையை எதிர்கொள்ள நாம் தயாராகிக்கொண்டு இருக்கிறோம். வடகிழக்குப் பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும் என்று தெரிகிறது. அதனால் மழைநீர் வடிகால் பணி, மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என ஏற்கெனவே செய்து வரும் பணிகளை விரைந்து முடிக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.