கூட்டணி பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் பேசுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் போய்விட்டார் என்பன உள்ளிட்ட விமர்சனங்களை முன்னாள் ஆளுநர் தமிழிசை முன்வைத்திருந்தார். இந்நிலையில், ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று(செப்.18) அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட பாதையில் வந்தால் திராவிட கட்சிகள் வளரவிடாது என பாஜகவினர் விமர்சிப்பார்கள். அது அவர்களுக்கு வயிற்றெரிச்சலை தரக் கூடிய அரசியல் தான். பெரியார் என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது. சட்டப்பேரவையில் பெரியார் என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறினார். அந்தளவுக்கு பெரியார் மீது வெறுப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.
விசிக மாநாட்டை விமர்சிப்பவர்கள் மூக்கறுபட்டு கூக்குரலிடுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் கணக்கு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். எப்படியாவது கூட்டணி மேலும் விரிசல் அடையாதா, பிளவுபடாதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததன் விரக்தி வெளிப்படுகிறது என தெரிவித்தார்.