சென்னையில் அரசுப் பள்ளிக் கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவும், அதன் நிமித்தமாக அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று(செப்.6) காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும் என தெரிவித்தார்.