மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தினமும் ரூ. 2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுன்ட்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது. மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கெனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.
எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுன்ட்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.