கன்னியாகுமரியில் 1, 144 ஹெக்டேர் நிலத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று(செப்.20) வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய அணு சக்தித் துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த 1, 144 ஹெக்டேர் பரப்பிலான பகுதிகளில் சுரங்கம் அமைக்க தமிழக அரசின் இசைவையும், ஒன்றிய சுரங்க அமைச்சக அனுமதியினையும் பெற்றுள்ளது. இதன் மூலம், கிள்ளியூர் தாலுகாவில் உள்ள கீழ்மிடலாம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லன்கோடு ஆகிய பகுதிகளில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும். இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயர கூடும். இதனைக் கவனத்தில் கொள்ளாமல், தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் போராட்டத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.