சென்னை: கோடை வெயில்: போலீசாருக்கு தொப்பி வழங்கிய கமிஷனர்

56பார்த்தது
சென்னை: கோடை வெயில்: போலீசாருக்கு தொப்பி வழங்கிய கமிஷனர்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் சந்திப்புகளில் 6 ஆயிரம் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

இதனால் வாகன போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் உடல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, கோடை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து போலீசாரின் உடல் ரீதியான நீர்சத்து குறைபாட்டை போக்கும் வகையிலும், சென்னை பெருநகர காவல்துறை கடந்த 2012ம் ஆண்டு முதல் கோடை காலத்தில் மோர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோடை வெப்பத்தில் இருந்து போக்குவரத்து போலீசார் தங்களை காத்துக்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் காகித கூழ் தொப்பி மற்றும் மோர் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 

சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் அருண், போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் காகித கூழ் தொப்பிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி