சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம்; 5 பேர் கைது

79பார்த்தது
சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம்; 5 பேர் கைது
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், 'கழிவு நீர் அகற்று சேவை வாகனங்கள் ஒப்பந்தம்' தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் முன்பு கடந்த திங்கள்கிழமை காலை திரண்டனர். திடீரென அவர்கள், வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பொருட்களை சேதப்படுத்தினர். வீட்டுக்குள் கழிவு நீரையும் ஊற்றினர். 

மேலும், சவுக்கு சங்கரின் தாயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் சம்பவம் நடைபெற்ற அன்றே உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விஜய், கல்யாண் குமார், செல்வா மற்றும் தேவி, பாரதி என 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி