மெரினாவில் நள்ளிரவில் மக்களுக்கு அனுமதி கிடையாது ஏன்?: போலீஸ்

59பார்த்தது
மெரினாவில் நள்ளிரவில் மக்களுக்கு அனுமதி கிடையாது ஏன்?: போலீஸ்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ஜலீல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் வாதிட்டதாவது, இரவு நேரங்களில் நேர கட்டுப்பாடு இல்லாமல் மெரினா உள்ளிட்ட கடற்கரையில் பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

கடற்கரையில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருவதால் இரவு நேரங்களில் போலீஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியாது. மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி