முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலமும், அதைத்தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி தமிழக தலைவர்கள் சார்பில் சென்னையில் நேற்று மவுன ஊர்வலம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், சென்னை அண்ணா சாலை வெலிங்டன் பிளாசாவில் தொடங்கி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வரை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.