மத்தியில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொண்டர்கள், பொதுமக்களுக்கு வடை, பாயசத்துடன் மதிய உணவு வழங்கி நிர்வாகிகள் கொண்டாடினர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தொலைக்காட்சியில் தெரிந்து கொள்வதற்காக ஆர்வமுடன் குவிந்திருந்தனர்.
ஆனால், தமிழகத்தில் பாஜகவும், கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தமடையச் செய்தாலும், பிற மாநிலங்களில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை உருவானதால் அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேநீர், மோர் வழங்கினர். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் வடை, பாயசத்துடன் பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் மதிய உணவும் வழங்கினர்.