தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தேர்தலை முன்னிட்டு மட்டுமே இது போன்ற பணியிட மாற்றம் நடைபெற்று இருந்தது இதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்தவர்கள் சென்னைக்கும் சென்னையில் இருந்தவர்கள் ஆவடி தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். வேறு இடங்களில் பணி செய்தவர்களை புதிய இடங்களில் பணியமர்த்தியதால் சட்டம் ஒழுங்கை திறம்பட கையாள்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்த காரணத்தினால் டிஜிபி மற்றும் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடம் மாற்றம் செய்ய வேண்டிய போலீஸாரின் பட்டியலை சேகரித்து வருகின்றனர்.
இதற்காக போலீசாரின் விருப்பங்களும் மனுக்களாக கேட்டு பெறப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக காவலர் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது இதில் சென்னை தாம்பரம் ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்ட 1, 016 போலீசார் தங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸாருக்கான பணியிட மாற்ற பட்டியலை டிஜிபி வெளியிட உள்ளார்.