தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகள் அனைவரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA) வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31/03/2025 வரை செல்லுபடியாகும் கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/06/2025 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.