ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ. 2,152 கோடி நிதியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான முன்னோட்டக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஆசிரியர்களுக்கான ஊதியம் - கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிச் செயல்பாடுகளை முடக்கும் வகையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்காமல் நிபந்தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் மத்திய அரசு, 44 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்கள், 21,276 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 6,675 கோடியை விடுவிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.