மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் 31ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில், தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இதற்கிடையே, நேற்று தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டது. மேலும் இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவே வலுவிழந்து வருகிறது.
அதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தமிழகத்தில் பெய்யும். இதே நிலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 85 டிகிரியாக இருக்கும்.