குமரியில் டிச. 31ல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: முதல்வர்
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிச. 31 மற்றும் ஜன. 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழக அரசு சார்பில் 25-வது ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருப்பதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில், கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடி உயரத்தில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக சிலை அமைத்தார். அந்தச் சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. வெள்ளிவிழா காண்கிறது வள்ளுவனார் சிலை. திருக்குறள் விளக்க உரைகள் மற்றும் திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் வரலாற்றை தென் குமரியிலிருந்து எழுத வேண்டும் என்ற நம்முடைய இலக்கின் அடையாளமான கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத்தமிழர்கள் எங்கிருந்தாலும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் முதல்வர் பேசியுள்ளார்.