கொலை வழக்கில் யுவராஜ் முதல் வகுப்பு கோர முடியாது: அரசு

74பார்த்தது
கொலை வழக்கில் யுவராஜ் முதல் வகுப்பு கோர முடியாது: அரசு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்கும்படி உரிமை கோர முடியாது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை பேரவைத் தலைவரான யுவராஜ் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் உள்ள யுவராஜூக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், யுவராஜின் கல்வித்தகுதி மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், கொலை போன்ற கொடுங்குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கூடாது என சிறை விதிகளிலும் உள்ளது. அதேபோல தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென்பதை யுவராஜ் உரிமையாகவும் கோர முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 20-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி