காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் பேச மாட்டார். காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் எதிர்த்தே தீருவோம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலர் க. மணிவாசன் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில், நேற்று மாலை, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி. ஆர். பாட்டீலை சந்தித்தனர். டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயனும் உடன் இருந்தார். சந்திப்பின்போது, காவிரி விவகாரம், மேகேதாட்டு அணை விவகாரம், முல்லைப்பெரியாறு, காவிரி - குண்டாறு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
காவிரியில் கர்நாடக அரசு எங்கு அணை கட்டினாலும் நாங்கள் எதிர்த்தே தீருவோம். கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்க மாட்டார். 38 தடவை பேசி, இனி பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தை நாடி, நடுவர் மன்றம் வந்தது. தற்போதும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இப்போது பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள், நீதிமன்றத்தில் பேசித்தீர்ப்பதாக கூறிவிடுவார்கள் எனவேதான் பேசவில்லை. சட்டப்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம் என அவர் தெரிவித்தார்.