தமிழகம் திராவிட பூமி என்பதை தேர்தல் உணர்த்தியிருக்கிறது: வைகோ

60பார்த்தது
தமிழகம் திராவிட பூமி என்பதை தேர்தல் உணர்த்தியிருக்கிறது: வைகோ
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி நடத்துகின்ற மு. க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த இண்டியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற்று முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் திருநாட்டு மக்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று ஆணவமும் அதிகாரத் திமிரும் கொப்பளிக்க தேர்தல் பரப்புரைகளில் மதவெறி ஊட்டி எதேச்சதிகாரப் போக்குடன் நடந்து கொண்டவர்களுக்கு மக்கள் சக்தி என்றால் என்ன என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தி உள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட திருச்சிராப்பள்ளி தொகுதியில் மூன்று லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைத்த தி. மு. கழகத்தின் ஆற்றல் மிக்க அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னோடிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.