தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழறிஞர்கள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் படைப்பாளர்களை பாராட்டி தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான தேவநேய பாவாணர் விருது (ரூ. 2 லட்சம் பரிசு மற்றும் ஒரு பவுன் தங்க பதக்கம்), வீரமாமுனிவர் விருது (ரூ. 2 லட்சம் பரிசு மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ. 50 ஆயிரம்பரிசு மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம்), நற்றமிழ் பாவலர் விருது(ரூ. 50 ஆயிரம் பரிசு மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம்), தூயதமிழ் பற்றாளர் விருது (ரூ. 20 ஆயிரம் பரிசு) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளர் பரிசுக்கும் (ரூ. 5 ஆயிரம் பரிசு) தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.