ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இது தொடர்பாக ராசிபுரம் நகர அதிமுக செயலாளரும், ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் குழு நிர்வாகியுமான எம். பாலசுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 1991-ம் ஆண்டு முதல் ராசிபுரம் பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்தில் செயல்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் செலவில் இந்த பேருந்து நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் என யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையம் உள்ள பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை காவல் துறை நிராகரித்து விட்டது. எனவே, பேருந்து நிலைய இடமாற்றத்தை எதிர்த்து அப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.