நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக ஐந்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.