சட்டம் - ஒழுங்கு: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்

72பார்த்தது
சட்டம் - ஒழுங்கு: இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 20) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழகத்தில் நிகழும் கொலை சம்பவங்கள் குறித்து பேச அனுமதி கோரினார்.  சேலத்தில் ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி அவர் பேசினார். "அன்றாட நிகழ்வுகள் போல் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடந்து வருகிறது" என கூறினார்.  ஆனால், அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "எனது தலைமையில் காவல்துறை குற்றச் சம்பவங்களைக் கையாள்வதிலும், தடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  குற்றச் சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் பழிக்குப்பழி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், திமுக ஆட்சியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன" என்றார். காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி