பேராசிரியர் அருணன், கவிஞர் நெல்லை ஜெயந்தா உள்ளிட்ட 6 பேருக்கு பபாசி கருணாநிதி பொற்கிழி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 27-ம் தேதி நடைபெறும் சென்னை புத்தக காட்சி தொடக்க விழாவில் இந்த விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார். இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ். கே. முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48-வது சென்னை புத்தக காட்சி வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.
அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் விழாவில், புத்தக காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்புரை நிகழ்த்துகிறார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுக்கு பேராசிரியர் அருணன் (உரைநடை), கவிஞர் நெல்லை ஜெயந்தா (கவிதை), சுரேஷ் குமார் இந்திரஜித் (நாவல்), என். ஸ்ரீராம் (சிறுகதைகள்), கலை வாணி (நாடகம்), நிர்மால்யா (மொழிபெயர்ப்பு) ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, பபாசி விருதுக்கு எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன், பேராசிரியை பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் சங்கர சரவணன், கவிஞர் ஆலந்தூர் கோ. மோகன ரங்கன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை உதயநிதி வழங்குவார் என தெரிவித்தனர்.